
என் உதடுகள் உன் உறவிற்க்கு மதிப்பளித்து
பல்லிழந்த பாம்பாய், பாரதப் பிரதமரைப் போல்
பேசாமல் மௌனம் காக்கக் கூடும்.
எனினும் என் மனம், உண்மையை உரக்கக் கூற எண்ணி,
அசாஞ்சேயின் ஆயுதமான வலைப்பதிவை நாடுகிறது.
அதை உருவாக்க உறுதுணையாய் இருந்த
என்னைப் பற்றியே எழுதுவாயா என
நீ கேட்பது கேட்கிறது.
என்ன செய்ய?
அவ்வப்போது ஆண்டவனை கோபித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்ட
மனித இனத்தை சேர்ந்தவள்தானே நானும்?
உலகமே, உறவுகளே, உணர்வுகளை அடக்கிக்கொண்டு
இதுவும் கடந்து போகும் என நினைப்போர் சிலர்.
மனதில் புதைந்துள்ள உணர்ச்சிகளை
மறைத்து, மறந்து வாழ முடியாமல் அதை வெளிக்காட்டுவோர் சிலர்.
நான் இரண்டாம் ஜாதி.
உன் அன்பையும் அரவணைப்பையும் என்றும் பெற எண்ணுகின்றேன்.
ஆனால் அனைத்தையும் ஆமாம்சாமியாய் ஏற்றுக்கொள்ள
முடியாதென்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என் கருத்துக்கள் உன்னை காயப்படுத்தக் கூடும்.
என்னை தவறாக எண்ணத் தூண்டும்.
என்றாலும், நான் இதுதான் என ஒப்புக்கொள்வதைவிட
ஒப்பனை செய்து, ஒற்றுமை என்ற பொய்யில் வாழ்வதை விரும்பவில்லை.
இப்படிக்கு,
வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட நம் வாழ்வின் வேரான
அன்பு, மாறாதிருக்க உண்மை மட்டும் உரித்தானதென
உளமாற நம்பும் நான்.