Wednesday, October 12, 2011

தீபாவளித் திருநாள்“வந்தது பார் தீபாவளி
இனி வாழ்வெல்லாம் இன்ப ஒளி….”


அபிராமி ஆடியோவின் குழந்தைப் பாடல்கள் (அதாங்க, ரைம்ஸ்!) டீவியில் ஓடிக்கொண்டிருந்தது. என் மகள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, நான் கொசுவர்த்திச் சுருள் சுற்றி, பின்னோக்கிச் சென்றேன்…

பள்ளிப் பருவத்தில், தீபாவளி என்றதும் என் நினைவுக்கு வருவது புதுத்துணி, பலகாரங்கள் மற்றும் பட்டாசு. தீபாவளிக்கு இரண்டு கவுன்கள் கண்டிப்பாக கிடைக்கும். வருடத்திற்க்கு ஒரு முறை மட்டும், அம்மா, குலோப் ஜாமுன் செய்யும் நாளும் அன்றுதான்.

பட்டாசுப் பட்டியலை நானும் அண்ணனும் தயாரிக்கத் தொடங்கும் போது அது பலப் பக்கங்கள் நீளும். “காசை கரியாக்க கூடாது" என்று அம்மாவும், " பட்ஜெட் நூறு ரூபாய் தான்" என்று அப்பாவும் கண்டிப்பாகச் சொன்ன பிறகு, பட்டியல் பத்து வரிககளுக்கு சுருங்கிவிடும். தீபாவளிக்கு முதல் நாள் கம்மி விலையில் அணில் பட்டாசுக் கடையில் வங்கியதும் உண்டு.

தீபாவளிக்கு முந்தைய தினம். சில கிலோமீட்டர்கள் நீளும் ரோட்டோரக் கடைகளைக் காண சென்ற பெண்கள் ஒன்பது மணிக்கு வீடு திரும்ப, ஆண்கள் அப்போதுதான் வீதி உலாவிற்க்கு தயாராவார்கள். அதிகாலை நான்கு மணி அளவில் திரும்புவார்கள். கை நிறைய மருதாணியோடு குழந்தைகள் தூங்கச் சென்றுவிடுவோம்.

தீபாவளி அன்று காலை ஐந்து மணிக்கு அனைவரும் எழுந்து விடுவோம். அம்மாக்கள் கோலம் போட, குழந்தைகள் அனைத்து வீட்டுக் கோலங்களிலும் கலர்ப்பொடி நிரப்ப, சைக்கிள் செல்ல வழியில்லாமல் திண்டாடும் பால்காரனின் பாடு பெரும்பாடுதான்! அப்பா மங்கல இசை நிகழ்ச்சியோடு டீவி முன் அமர்வார். ஐந்து நிமிடத்திற்க்கு ஒரு முறை வெடிக்கப்படும் 100வாலா அவரது ஆர்வத்திற்க்கு மங்கலம் பாடிவிடும்! எல்லா உறவினர்கள் வீட்டிற்க்கும் தவறாமல் சென்று தீபாவளிக் காசு வாங்க, ஆசிர்வாதம் வாங்குவோம்!

லட்சுமி வெடி, குருவி வெடி, சீனி வெடி, சரம் என ஆண் குழந்தைகள் தங்கள் வீரதீர செயல்களில் இறங்க, பெண் குழந்தைகளோ "அய்யா வெடி, பாட்டி வெடி" என எச்சரிக்கை மணி (alarmஅ வேற எப்படி சொல்ல?!) எழுப்ப, நிற்க்கப்பட்டிருப்பார்கள். சிலர் ஓரமாக நின்று ஓலை வெடி வெடித்துவிட்டு, "நானும் வெடி வெடித்தேனே" என பீத்திக்கொள்வார்கள். இரவில் மத்தாப்பு, புஸ்வானம், சங்குசக்கரம் கொளுத்தி, மொட்டை மாடியில் வான வேடிக்கைகளை கண்டு ரசிப்போம். அனைவரின் பட்டாசும் தீர்ந்த பிறகு, ஒளித்து வைத்திருந்த வெடிகளை வெடித்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பதில் பக்கத்து வீட்டிப் பையன் கில்லாடி !

அடுத்த நாள் காலையில், யார் வீட்டில் அதிகமான பேப்பர் துண்டுகள் கிடக்கின்றன என காண ஆர்வமாக இருப்போம். காரணம், அவர்கள்தான் அதிக வெடிகள் வெடித்து சாதனை செய்ததாக அர்த்தம்.

இப்பொழுது எல்லாம், தீபாவளிக்கு லீவு கிடைக்குமா, கிடைத்தாலும் ஊருக்குச் சென்று வர டிக்கெட் கிடைக்குமா என்ற கவலைதான் எல்லோர் முகத்திலும் தெரிகிறது. அப்படியே சென்றாலும், கவனிப்பாரற்றுக் கிடக்கும் காலி வீதிகளைக் காணும்போது, மனன் லேசாக கனக்கத்தான் செய்கிறது. இதனால், தீபாவளியும் இன்னொரு சோம்பேறி சனிக்கிழமையாக மாறிவிட்டது.

"வேற பாட்டை போடுமா" என என் மகள் கூறியபோதுதான் கொசுவர்த்திச் சுருள் சுற்றி முடித்து சில மணித்துளிகள் ஆகியிருந்தது தெரிந்தது...