Showing posts with label TAMIL. Show all posts
Showing posts with label TAMIL. Show all posts

Wednesday, December 17, 2014

ரசிகன்


போத்தீஸில் பர்ச்சேஸ் பண்ணேன் என்பதை காட்ட கட்டப்பை வைத்திருப்பது போல, ஜாக்கி ஜட்டி அணிந்திருப்பதை காட்ட ஜீன்ஸை இடுப்புக்கு கீழ் அணிந்துகொள்வதை போல, ரஜினி படம் ரிலீஸானவுடன் பார்த்தேன் என்பதை சொல்லிக்கொள்ள எல்லோரும், (அடியேனும் அடக்கம்) லிங்கா படம் பார்க்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்திருந்தால் ரஜினி படம் பார்க்க தியேட்டருக்கு 2 வாரங்கள் கழித்துதான் போக முடியும். மல்ட்டிப்பிளெக்ஸ் மெட்ரொ நகரங்ளில் முதல் நாள் முதல் ஷோ சாத்தியமான ஒன்றாகிவிட்டது. ரஜினியின் பிறந்த நாளன்று வெளியானதால், திரை விமர்சனத்தைவிட வாழ்த்துக்களையே தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பின. லண்டனில் வசிக்கும் தோழி வாட்ஸ்ஸாப்பில் செய்தி அனுப்பினாள். "நான் தலைவரை வாழ்த்துவது டிவியில் வரும். மறக்காம பாருங்க". படம் எப்படி என்று கேட்டால், "அதை விடு, இதை பாரு" என பதில் வந்தது.


 
இன்னுமாடா இந்த உலகம் நம்மள  நம்புது?? 


அந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். ஒரு குடும்பம் அமெரிக்காவில் அவருக்காக சிறப்பு பூஜை செய்கிறது. மற்றொரு பக்கம் நாசா விஞ்ஞானிகள் ரஜினியின் பக்தர்கள் என்கிறார்கள். இயக்குநர் அமீர், "உங்களை நம்பிட்டோம், எதாவது பண்ணுங்க" என்று கேட்கிறார். பாரதிய ஜனதா கட்சி, இதுதான் சரியான சந்தர்ப்பம் என அரசியலுக்கு அழைக்கிறது.


சாதாரண பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கி, வில்லனாக நடித்து, கதாநாயகனாக உருவெடுத்து, சூப்பர்ஸ்டாரான ரஜினி, தன் வாழ்நாள் முழுவதும் பெரிதாக எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. அவரது இளவயது நண்பர்களே இன்றும் அவரின் நண்பர்கள். சின்ன சின்ன குறும்புகள், சேட்டைகள், அவ்வப்போது பார்ட்டி என மிக சாதாரண சந்தோஷங்களில் சிரிக்கிறார். படத்தில் மட்டுமே பன்ச் வசனங்கள் பேசிய தன்னை நம்பி இத்தனை பேரா என குழம்பி, இமயமலை செல்கிறார்; இறைவனை வழிபடுகிறார். அமைதியை காத்தால் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என முயற்சி செய்கிறார். ஊஹும். மக்கள் விடுவதாயில்லை.அவர்களை ஏமாற்றவும் மனமில்லாமல் "கண்டிப்பா ஏதாவது பண்ணுவேன்" என உறுதியளித்து மீண்டும் எதிப்பார்ப்புக்களை எகிறவிடுகிறார். இன்னொரு பக்கம் பாரதிராஜா , "20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்கு கூப்பிடுவீங்க ?" என கொந்தழிக்கிறார். சீமான் "அரசியலுக்கு ரஜினி அவசியம் இல்லை" என்று சீறுகிறார். அந்த பாசமுள்ள மனிதன், மீசை வச்ச குழந்தை என்ன தான் செய்யும் ?!



 
"இவன் ரொம்ப நல்லவன்னு " சொல்லிட்டாடா !!

ரஜினிக்கு வேண்டுகோள் விடுக்கும் ரசிகனே, உனக்கு ஒரு வேண்டுகோள். அவரை அரசியலுக்கு அழைக்காமல், அவர் போக்கில் விட்டுவிடு. அவர் நமக்கானவர் அல்ல; நம்மில் ஒருவர். ரஜினிக்கும் ஒரு வேண்டுகோள். உன் எளிமைதான் எல்லோரையும் ஈர்த்திருக்கிறது. என்றாலும், மக்கள் உன்னை நம்பியதற்க்காக நற்காரியங்கள் சில பல செய்துவிடு. மதுபானங்களுக்கு எதிராக குரல் கொடு. பெண்களின் பாதுகாப்புக்கான போராட்டங்களில் பங்கெடு. முக்கியமாக உன் ரசிகர்களை தங்கள் தொழில்களில் கவனம் செலுத்தச்சொல்லு. உன் சொற்களும் செயல்களும் அவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் அளிக்கட்டும். நீயும் நிம்மதியாக நித்திரை கொள்.  இப்படிக்கு, உன் நலம் விரும்பி.

படம் 1 உபயம் : andhrawishesh.com
படம் 2 உபயம்: funny-pictures.picphotos.net

Tuesday, November 26, 2013

   எழுத்தின் விதை

                                                                   


எழுத்துக்கள் எண்ணங்களின் வெளிப்பாடு;
எதிரியை எதிர்க்க இயலாதபோது இதயத்திற்கு
இதம் தரும் ஆறுதல் தாலாட்டு.

எழுத்துக்கள் பகிர்தலுக்கான முயற்சி;
உணர்ச்சிகளை ஊரார்க்கு உணர்த்தப் பயன்படும்
ஓர் சிறந்த கருவி.

வட்டியும் முதலுமாக, மறக்க நினைத்து, வேடிக்கைப் பார்க்க 
எனக்கும் ஆசைதான்.
என்ன செய்வது ?
என்னை நீங்கள் படிக்க 
நான் ராஜூ முருகனாகவோ மாரி செல்வராஜாகவோ முத்துக்குமாராகவோ 
இருக்க வேண்டுமே...

என் வாழ்க்கை நாடகத்தின் கதாப்பாத்திரங்கள்
என் வார்த்தைகளின் விதைகளாகி, விருட்சமாக வளர்ந்து,
இன்று விழுதுகளாக என்னோடு பயணிக்கின்றனர்.

இறந்த காலத்தின் கால்தடங்களை மறைத்து,
எதிர் கால கனவை நோக்கி,
இன்றைய நாளை நகர்த்திச் செல்லும்
இன்னுமோர் சிட்டுக்குருவி இது.

                                                                 - வைஷ்ணவி பிரசாத் .
                                                                   










Saturday, February 2, 2013

காலம் கற்றுக்கொடுத்தது


பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்காக
பாப்பாவின் பள்ளிக்குச் சென்றிருந்தேன்.
ஆர்வமாய் ஆயாக்காவை சுட்டிக்காட்டி
"இதுதான் காளியம்மா " என்றாள்.
சிரித்த முகமாய் இருந்த காளியம்மவைப்
பார்த்து புன்னகைக்க நினைத்த போடு
சிக்கலான எண்ணம் தோன்றியது.
பண்டிகையைக் காரணம் காட்டி
பணம் கேட்டு விடுவாளோ?!
இருபத்தைந்து வருட வாழ்க்கை அனுபவம்
எல்லோரையும் சந்தேகப்படு என்பதைத்தானா
கற்றுக்கொடுத்தது ?
விடை தெரியாமல் வெட்கித் தலை குனிந்தேன்.


- வைஷ்ணவி பிரசாத்

இடம் பெயர்தல்




Painting by S.Ilayaraja
Pic courtesy: alraja.blogspot.in

இறுக்கமான முகத்தை தவிர்த்து
இதழ்கள் விரித்து சிரிக்க வேண்டும்

சுடிதாருக்கு துப்பட்டாவும்
சுருட்டை முடிக்கு சீயக்காயும்
போட வேண்டும்

ஆற்றுத் தண்ணீரை அடுப்பில் வைத்து
ஆரிய பின் குடிக்க வேண்டும்

பக்கத்து வீட்டுக்காரருடன்
பேசிப் பழக வேண்டும்

பிழைக்க நகரம் வந்த எனக்கு
விடுமுறைக்கு ஊருக்குத் திரும்ப
பயமாக இருக்கிறது,

நான் மீண்டும்
நானாக மாற வேண்டுமே...



- வைஷ்ணவி பிரசாத்

Thursday, November 22, 2012

துப்பாக்கி


ஒரு ராணுவ வீரனின் வாழ்வில் நடக்கும் ஏதேச்சையான நிகழ்வு, நாட்டின் தீவிரவாத பிரச்சனையை ஒழிக்கும் சந்தர்ப்பமாக அமையும்பொழுது, அவன் எடுக்கும் ஆயுதமே துப்பாக்கி. விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் அமைந்திருக்கும் படம் இருவரின் ரசிகர்களையும் திருப்திப்படுத்தி இருக்கிறது. ஹீரோ இன்ட்ரோ சாங், சண்டைக் காட்சிகள், நடனம், காமெடி ,ஹீரோயிசம் க்ளைமாக்ஸ் என பல விஜய் பட கிளிஷேக்கள் இருந்தாலும் தீவிரவாத ஸ்லீப்பர் செல்ஸ் என்னும் திரைத்தளம் மட்டும் முருகதாஸ் உடையது.



Image courtesy : http://www.indiaeveryday.in/tamilnadu/gallery/t/6688/vijay-thuppaki-movie-posters/2.htm

பிடிப்பட்ட தீவிரவாதியின் சுண்டு விரலை வெட்டுவது, போலீஸ் அதிகாரியை தற்கொலைக்கு தூண்டுவது, தங்கையை தீவிரவாதியின் இடத்திற்கு அனுப்புவது, தன உயிரை பணயம் வைப்பது போன்ற இடங்களில் மனத்தைக் கவரும் மாவீரன் ஆகிறான் விஜய். நண்பன் சத்யனுடன் ரகசியம் பேசுகையில் காஜலின் அழைப்பு வந்ததும் உடனே ஓடும்போது காதல் மன்னன் ஆகிறான். சற்று பூசினது போல் தெரியும் கன்னங்கள், புதுப் பொலிவு (ஒகே ஒகே, காஜல் அகர்வால் பத்தியும் கொஞ்சம் சொல்லுறேன் ). அகன்ற விழிகள், அழகிய சிரிப்பு, ஆவின் பால் நிறம் ( ஹூம், டீ போடுற காப்பல திரை விமர்சனம் எழுத உக்காந்தா இப்புடித்தான் :), அருமையான உயரம், அளவான நடிப்பு என கவனம் ஈர்க்கிறார் காஜல் அகர்வால்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் தொய்வையே ஏற்படுத்துகின்றன. கதையோடு ஒட்டாத ஒரே மாதிரியான பார்ட்டி, டூயெட் பாடல்களுக்கு மத்தியில் கேர்ள் ப்ரேன்ட் மட்டும் கொஞ்சம் ரசிக்கும் தரம்.

தீவிரவாதியைக் காட்டும் போது வரும் " யாயீ " ஹிந்துஸ்தானி கசல் இசையை எப்பயா விடப்போரிங்க ? " எனக்கு கொஞ்சம் டமில் தெரியும் " டயலாக்கை வாஞ்சிநாதன் படத்தில் வரும் தினத்தந்தி படிக்கும் யூசுப்கானே சொல்லிட்டான்..

ஹீரோவை கோட்சூட் மூலம் சுலபமாக கண்டுபிடிக்கும் வில்லன், தங்கையை நாயின் உதவியோடு மீட்கும் ஹீரோ, ஒத்தைக்கு ஒத்தை வாடா என வில்லனை உசுப்பேத்தி தப்பிக்கும் ஹீரோ, இதெல்லாம் ஆடியன்சை அல்வா கொடுத்து அமுக்க பார்த்திருக்கும் அநியாயங்கள் !


இதுபோன்ற சில சொதல்பல்கள் இருந்தாலும் வலுவான வசனங்களுக்காகவும் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை விளக்கிய விதத்திர்க்காகவும், கண்டிப்பாக ஒரு முறை ரசிக்கலாம், இந்தக் குறி தவறாத துப்பாக்கியை !

Wednesday, October 12, 2011

தீபாவளித் திருநாள்



“வந்தது பார் தீபாவளி
இனி வாழ்வெல்லாம் இன்ப ஒளி….”


அபிராமி ஆடியோவின் குழந்தைப் பாடல்கள் (அதாங்க, ரைம்ஸ்!) டீவியில் ஓடிக்கொண்டிருந்தது. என் மகள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, நான் கொசுவர்த்திச் சுருள் சுற்றி, பின்னோக்கிச் சென்றேன்…

பள்ளிப் பருவத்தில், தீபாவளி என்றதும் என் நினைவுக்கு வருவது புதுத்துணி, பலகாரங்கள் மற்றும் பட்டாசு. தீபாவளிக்கு இரண்டு கவுன்கள் கண்டிப்பாக கிடைக்கும். வருடத்திற்க்கு ஒரு முறை மட்டும், அம்மா, குலோப் ஜாமுன் செய்யும் நாளும் அன்றுதான்.

பட்டாசுப் பட்டியலை நானும் அண்ணனும் தயாரிக்கத் தொடங்கும் போது அது பலப் பக்கங்கள் நீளும். “காசை கரியாக்க கூடாது" என்று அம்மாவும், " பட்ஜெட் நூறு ரூபாய் தான்" என்று அப்பாவும் கண்டிப்பாகச் சொன்ன பிறகு, பட்டியல் பத்து வரிககளுக்கு சுருங்கிவிடும். தீபாவளிக்கு முதல் நாள் கம்மி விலையில் அணில் பட்டாசுக் கடையில் வங்கியதும் உண்டு.

தீபாவளிக்கு முந்தைய தினம். சில கிலோமீட்டர்கள் நீளும் ரோட்டோரக் கடைகளைக் காண சென்ற பெண்கள் ஒன்பது மணிக்கு வீடு திரும்ப, ஆண்கள் அப்போதுதான் வீதி உலாவிற்க்கு தயாராவார்கள். அதிகாலை நான்கு மணி அளவில் திரும்புவார்கள். கை நிறைய மருதாணியோடு குழந்தைகள் தூங்கச் சென்றுவிடுவோம்.

தீபாவளி அன்று காலை ஐந்து மணிக்கு அனைவரும் எழுந்து விடுவோம். அம்மாக்கள் கோலம் போட, குழந்தைகள் அனைத்து வீட்டுக் கோலங்களிலும் கலர்ப்பொடி நிரப்ப, சைக்கிள் செல்ல வழியில்லாமல் திண்டாடும் பால்காரனின் பாடு பெரும்பாடுதான்! அப்பா மங்கல இசை நிகழ்ச்சியோடு டீவி முன் அமர்வார். ஐந்து நிமிடத்திற்க்கு ஒரு முறை வெடிக்கப்படும் 100வாலா அவரது ஆர்வத்திற்க்கு மங்கலம் பாடிவிடும்! எல்லா உறவினர்கள் வீட்டிற்க்கும் தவறாமல் சென்று தீபாவளிக் காசு வாங்க, ஆசிர்வாதம் வாங்குவோம்!

லட்சுமி வெடி, குருவி வெடி, சீனி வெடி, சரம் என ஆண் குழந்தைகள் தங்கள் வீரதீர செயல்களில் இறங்க, பெண் குழந்தைகளோ "அய்யா வெடி, பாட்டி வெடி" என எச்சரிக்கை மணி (alarmஅ வேற எப்படி சொல்ல?!) எழுப்ப, நிற்க்கப்பட்டிருப்பார்கள். சிலர் ஓரமாக நின்று ஓலை வெடி வெடித்துவிட்டு, "நானும் வெடி வெடித்தேனே" என பீத்திக்கொள்வார்கள். இரவில் மத்தாப்பு, புஸ்வானம், சங்குசக்கரம் கொளுத்தி, மொட்டை மாடியில் வான வேடிக்கைகளை கண்டு ரசிப்போம். அனைவரின் பட்டாசும் தீர்ந்த பிறகு, ஒளித்து வைத்திருந்த வெடிகளை வெடித்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பதில் பக்கத்து வீட்டிப் பையன் கில்லாடி !

அடுத்த நாள் காலையில், யார் வீட்டில் அதிகமான பேப்பர் துண்டுகள் கிடக்கின்றன என காண ஆர்வமாக இருப்போம். காரணம், அவர்கள்தான் அதிக வெடிகள் வெடித்து சாதனை செய்ததாக அர்த்தம்.

இப்பொழுது எல்லாம், தீபாவளிக்கு லீவு கிடைக்குமா, கிடைத்தாலும் ஊருக்குச் சென்று வர டிக்கெட் கிடைக்குமா என்ற கவலைதான் எல்லோர் முகத்திலும் தெரிகிறது. அப்படியே சென்றாலும், கவனிப்பாரற்றுக் கிடக்கும் காலி வீதிகளைக் காணும்போது, மனன் லேசாக கனக்கத்தான் செய்கிறது. இதனால், தீபாவளியும் இன்னொரு சோம்பேறி சனிக்கிழமையாக மாறிவிட்டது.

"வேற பாட்டை போடுமா" என என் மகள் கூறியபோதுதான் கொசுவர்த்திச் சுருள் சுற்றி முடித்து சில மணித்துளிகள் ஆகியிருந்தது தெரிந்தது...

Sunday, September 18, 2011

உறவே, உனக்கோர் கடிதம்


என் உதடுகள் உன் உறவிற்க்கு மதிப்பளித்து
பல்லிழந்த பாம்பாய், பாரதப் பிரதமரைப் போல்
பேசாமல் மௌனம் காக்கக் கூடும்.


எனினும் என் மனம், உண்மையை உரக்கக் கூற எண்ணி,
அசாஞ்சேயின் ஆயுதமான வலைப்பதிவை நாடுகிறது.


அதை உருவாக்க உறுதுணையாய் இருந்த
என்னைப் பற்றியே எழுதுவாயா என
நீ கேட்பது கேட்கிறது.
என்ன செய்ய?
அவ்வப்போது ஆண்டவனை கோபித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்ட
மனித இனத்தை சேர்ந்தவள்தானே நானும்?


உலகமே, உறவுகளே, உணர்வுகளை அடக்கிக்கொண்டு
இதுவும் கடந்து போகும் என நினைப்போர் சிலர்.
மனதில் புதைந்துள்ள உணர்ச்சிகளை
மறைத்து, மறந்து வாழ முடியாமல் அதை வெளிக்காட்டுவோர் சிலர்.
நான் இரண்டாம் ஜாதி.


உன் அன்பையும் அரவணைப்பையும் என்றும் பெற எண்ணுகின்றேன்.
ஆனால் அனைத்தையும் ஆமாம்சாமியாய் ஏற்றுக்கொள்ள
முடியாதென்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


என் கருத்துக்கள் உன்னை காயப்படுத்தக் கூடும்.
என்னை தவறாக எண்ணத் தூண்டும்.
என்றாலும், நான் இதுதான் என ஒப்புக்கொள்வதைவிட
ஒப்பனை செய்து, ஒற்றுமை என்ற பொய்யில் வாழ்வதை விரும்பவில்லை.


இப்படிக்கு,
வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட நம் வாழ்வின் வேரான
அன்பு, மாறாதிருக்க உண்மை மட்டும் உரித்தானதென
உளமாற நம்பும் நான்.

Thursday, August 18, 2011

தெய்வத் திருமகள்


குழந்தையும் தெய்வமும் ஒன்று. அப்படிப்பட்ட ஆறு வயது குழந்தையின் அறிவை கொண்ட அப்பாவின் தேவதையைப் பற்றிய கதையே தெய்வத் திருமகள்.

ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி கிராமத்தில் சாக்கிலேட் ஃபேக்டரியில் வேலை செய்பவர் கிருஷ்ணா(விக்ரம்). ஆறே வயதோடு மன வளர்ச்சி நின்றுவிட, ஆள் மட்டும் வளர்ந்து திருமணம் புரிந்து, ஒரு குழந்தைக்குத் தந்தையாகிறார். அக்குழந்தையை நன்பர்களோடு வளர்க்கிறார். குழந்தையின் சித்தியான அமலா பால் அவரைக் கண்டுகொள்ள, குழந்தை யாருக்குச் சொந்தம் என்னும் போராட்டமே கதை.

விக்ரம் குழந்தை அழுவதைக் கண்டு செய்வதறியாமல் அமர்ந்திருக்கும் போதும், “மரம் ஏன் உயரமா இருக்கு ?, காக்கா ஏன் கருப்பா இருக்கு?” என்னும் நிலாவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதும், இறுதியில் குழந்தையை ஒப்படைக்கும்போதும் நடிப்பால் நம்மை அசர வைக்கிறார்.

நிலாவாக வரும் சுட்டிப்பெண் சாரா அழகுப் பதுமை. அப்பா வீட்டிற்குத் தாமதமாக வரும் போது கோபித்துக் கொள்வது கொள்ளை அழகு. கோர்டில் அப்பாவிடம் “சாப்பிடலையா? மெலிஞ்சிட்டியே” என சைகையில் கேட்பது அருமை!

அமலா பாலின் பெரியக் கண்கள் பாதிக் கதையைச் சொல்லிவிடுகிறது. யதார்த்த நடிப்பால் கதாப்பாத்திரத்தோடு ஒன்றிப்போகும் அனுஷ்காவிற்கு இது இன்னொரு வெற்றி.
கார்த்திக்குமாரைப் பார்க்கும்போதுதான் பாவமாக இருக்கிறது. எத்தனை படத்தில்தான் கதாநாயகியைக் கோட்டை விடுவார் ?

Y.G. மகேந்திரனையும் நாசரையும் விஜய் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. வார்த்தை வராமல் உதடு துடிக்கும் வெவ்வேறு காட்சியில் சோகத்தை விட சலிப்பையே இருவரும் ஏற்படுத்துகின்றனர். சந்தானம் தனக்கு ஜோடியே இல்லை என்னும் கவலை தீரவே பீச் காட்சியில் அனுஷ்காவுடன் குடையோடு உட்கார்த்திருக்கும் காட்சி அமைக்கப்பட்டதோ ? (அதை போஸ்டரிலும் காணமுடிகிறது.)

G.V. பிரகாஷின் இசையும், பின்ணனி இசையும் படத்தின் உணர்ச்சிகளை நமக்குள் புகுத்திவிடுகின்றது. அனைத்துத் தமிழ் படத்தைப்போல பாதிக்கப்பட்டோரை பல மணி நேரம் கோர்ட்டில் வாதாடவிடாமல், சைகை மொழியிலேயே நிலாவும் விக்ரமும் பேசிக்கொண்டு மனதைக் கவரச் செய்ததற்கு பாராட்டுக்கள்.

என்றாலும் தமிழ்ப்பட க்ளஷேக்கள் பலவற்றைக் காண முடிகிறது. விக்ரமின் மனைவி பிரசவத்தில் இறப்பது, அவரது முகத்தை இறுதிவரை காண்பிக்காதது (அழகனிலேயே இதைப் பார்த்தாச்சே), விக்ரம் அனுஷ்காவை கட்டிப்பிடித்ததும் ஒரு பாட்டு, படத்தின் இறுதியில் அனைவரும் திருந்திவிடுவது என, இறுதி காட்சி தவிர எல்லாமே எதிர்பார்த்ததுதான்.
விக்ரம் கதை சொல்வது மூன்றாம் பிறையை நினைவுப்படுத்திவிடக் கூடாது என இயக்குனர் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.

என்னதான் நண்பர்கள் உதவினாலும், விக்ரமால் எவ்வாறு குழந்தையை ஐந்து வயது வரை வளர்த்திருக்க முடியும்? 20 வருட அனுபவமிக்க வக்கீலை அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடியுமா? நிலாவின் பள்ளிக்கூடத்தின் பெயரையே ஞாபகம் வைத்திருக்க முடியாத விக்ரமால் எவ்வாறு நாசரின் குழந்தைக்கு சரியான மருந்தை கடையிலிருந்து வாங்கிவர முடிந்தது?

இப்படி படம் முழுக்க லாஜிக் ஓட்டைகள். இதையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு நடிப்பையும் பாசத்தையும் மட்டும் ரசிக்கும்போது நெஞ்சை நெகிழச் செய்கிறாள் தெய்வத் திருமகள்.