Wednesday, December 17, 2014

ரசிகன்


போத்தீஸில் பர்ச்சேஸ் பண்ணேன் என்பதை காட்ட கட்டப்பை வைத்திருப்பது போல, ஜாக்கி ஜட்டி அணிந்திருப்பதை காட்ட ஜீன்ஸை இடுப்புக்கு கீழ் அணிந்துகொள்வதை போல, ரஜினி படம் ரிலீஸானவுடன் பார்த்தேன் என்பதை சொல்லிக்கொள்ள எல்லோரும், (அடியேனும் அடக்கம்) லிங்கா படம் பார்க்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்திருந்தால் ரஜினி படம் பார்க்க தியேட்டருக்கு 2 வாரங்கள் கழித்துதான் போக முடியும். மல்ட்டிப்பிளெக்ஸ் மெட்ரொ நகரங்ளில் முதல் நாள் முதல் ஷோ சாத்தியமான ஒன்றாகிவிட்டது. ரஜினியின் பிறந்த நாளன்று வெளியானதால், திரை விமர்சனத்தைவிட வாழ்த்துக்களையே தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பின. லண்டனில் வசிக்கும் தோழி வாட்ஸ்ஸாப்பில் செய்தி அனுப்பினாள். "நான் தலைவரை வாழ்த்துவது டிவியில் வரும். மறக்காம பாருங்க". படம் எப்படி என்று கேட்டால், "அதை விடு, இதை பாரு" என பதில் வந்தது.


 
இன்னுமாடா இந்த உலகம் நம்மள  நம்புது?? 


அந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். ஒரு குடும்பம் அமெரிக்காவில் அவருக்காக சிறப்பு பூஜை செய்கிறது. மற்றொரு பக்கம் நாசா விஞ்ஞானிகள் ரஜினியின் பக்தர்கள் என்கிறார்கள். இயக்குநர் அமீர், "உங்களை நம்பிட்டோம், எதாவது பண்ணுங்க" என்று கேட்கிறார். பாரதிய ஜனதா கட்சி, இதுதான் சரியான சந்தர்ப்பம் என அரசியலுக்கு அழைக்கிறது.


சாதாரண பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கி, வில்லனாக நடித்து, கதாநாயகனாக உருவெடுத்து, சூப்பர்ஸ்டாரான ரஜினி, தன் வாழ்நாள் முழுவதும் பெரிதாக எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. அவரது இளவயது நண்பர்களே இன்றும் அவரின் நண்பர்கள். சின்ன சின்ன குறும்புகள், சேட்டைகள், அவ்வப்போது பார்ட்டி என மிக சாதாரண சந்தோஷங்களில் சிரிக்கிறார். படத்தில் மட்டுமே பன்ச் வசனங்கள் பேசிய தன்னை நம்பி இத்தனை பேரா என குழம்பி, இமயமலை செல்கிறார்; இறைவனை வழிபடுகிறார். அமைதியை காத்தால் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என முயற்சி செய்கிறார். ஊஹும். மக்கள் விடுவதாயில்லை.அவர்களை ஏமாற்றவும் மனமில்லாமல் "கண்டிப்பா ஏதாவது பண்ணுவேன்" என உறுதியளித்து மீண்டும் எதிப்பார்ப்புக்களை எகிறவிடுகிறார். இன்னொரு பக்கம் பாரதிராஜா , "20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்கு கூப்பிடுவீங்க ?" என கொந்தழிக்கிறார். சீமான் "அரசியலுக்கு ரஜினி அவசியம் இல்லை" என்று சீறுகிறார். அந்த பாசமுள்ள மனிதன், மீசை வச்ச குழந்தை என்ன தான் செய்யும் ?!



 
"இவன் ரொம்ப நல்லவன்னு " சொல்லிட்டாடா !!

ரஜினிக்கு வேண்டுகோள் விடுக்கும் ரசிகனே, உனக்கு ஒரு வேண்டுகோள். அவரை அரசியலுக்கு அழைக்காமல், அவர் போக்கில் விட்டுவிடு. அவர் நமக்கானவர் அல்ல; நம்மில் ஒருவர். ரஜினிக்கும் ஒரு வேண்டுகோள். உன் எளிமைதான் எல்லோரையும் ஈர்த்திருக்கிறது. என்றாலும், மக்கள் உன்னை நம்பியதற்க்காக நற்காரியங்கள் சில பல செய்துவிடு. மதுபானங்களுக்கு எதிராக குரல் கொடு. பெண்களின் பாதுகாப்புக்கான போராட்டங்களில் பங்கெடு. முக்கியமாக உன் ரசிகர்களை தங்கள் தொழில்களில் கவனம் செலுத்தச்சொல்லு. உன் சொற்களும் செயல்களும் அவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் அளிக்கட்டும். நீயும் நிம்மதியாக நித்திரை கொள்.  இப்படிக்கு, உன் நலம் விரும்பி.

படம் 1 உபயம் : andhrawishesh.com
படம் 2 உபயம்: funny-pictures.picphotos.net