"அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டது"; "கோடை வெயில் அனைவரையும் வாட்டுகிறது"; இதுபோன்ற செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, இடைவேளையில் வரும் விளம்பரங்களோ வேறுவிதமாக இருக்கின்றன. "கோடைக் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது "; "விடுமுறை சிறப்பு தள்ளுபடி" என வெயில் கால சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. என்னதான் சூரிய பகவான் தன உஷ்ணத்தை நம் மீது காண்பித்தாலும், கோடைக்காலம், குதூகல காலம்தான்! காரணங்கள் இதோ:
I குழந்தைப் பருவத்திலிருந்து ஏப்ரல் மே என்றாலே நினைவிற்கு வருவது பரீட்சைமுடிந்து பள்ளி விடுமுறை தான். 'கழற்றிவிட்ட கழுதைகள் போல் சுற்றும் நாட்கள்' என அப்பா சொன்னது ஞாபகம் வருகிறது.
II வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட இயற்கை நமக்களித்துள்ள உணவு வகைகள் சிறப்புமிக்கவை. தர்பூசணி, மாங்காய் ,மாம்பழம் , இளநீர், நுங்கு போன்றவற்றிர்காகவே கோடையை வரவேரக்கலாம் .
II அனைத்துக் கோயில்களும் திருவிழாக்களைக் கொண்டாடுவதும் கோடைக் காலத்தில்தான். மதுரையில் பிறந்து வளர்ந்ததால் சித்திரைத் திருவிழா பார்த்ததுண்டு. கோவில்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு, தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு, தேரில் உலா வருகையில் ஊரே உற்சாக வெள்ளத்தில் மிதக்கும். கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் பிரசித்திப் பெற்றது .
IV என்னதான் வீடு சொர்க்கம் என்றாலும் , அவ்வப்போது உறவினர் வீட்டிற்குச் செல்வது மகிழ்ச்சியான விஷயம். சித்தியின் மீன் குழம்பு, குழந்தைகளுடன் கும்மாளம், பாட்டியுடன் அரட்டை போன்ற நினைவுகள் நெஞ்சில் நிரந்தரமாய் தங்கிவிட்டது.
V அரசுப் பொருட்காட்சி கோடையின் கடைசிக் கொடை. ரங்க ராட்டினத்திர்காகவும் பென்சில் டப்பாவிர்காகவும் நாங்கள் போக, ரப்பர்பேன்ட் வாங்கவும் டெல்லி அப்பளம் சாப்பிடவும் அம்மாக்கள் போவார்கள். அப்பாக்களுக்கு மட்டும் பொருட்காட்சி பண விரையகாட்சிதான்.
குளிர்காலத்தில் மழையை ரசிக்கலாம். ஆனால் அவை பெரும்பாலும் தனிமைக் காலங்களாகவே திகழ்கின்றன. கோடைக் காலத்தின் வெயிலை ரசிக்கமுடியாதுதான். என்றாலும் அதன் அனுபவங்கள், நம் வாழ்வின் ஆவணங்களாக மாறிவிடுகின்றன. இந்த காலம் கற்றுத்தரும் பாடம் நம் காதில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.